search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை
    X

    கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் ஓடவில்லை #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    கோவை:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, டாக்சிகள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இன்று இயக்கப்படாது என அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

    இதேபோல அரசு பஸ்களையும் இயக்க மாட்டோம் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றவில்லை.

    கோவை மாவட்டத்தில் இன்று காலை அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின. காலை 7 மணி நிலவரப்படி மாநகரில் 90 சதவீத பஸ்களும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 97 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டது. காலை 8 மணி நிலவரப்படி அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் வழக்கம் போல முழுமையாக இயக்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த வேலை நிறுத்தத்தையொட்டி கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. உக்கடம், காந்திபுரத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர், கொச்சி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இன்று பஸ்கள் இயக்கப்படாததால் டெப்போவில் நிறுத்தப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு வரக் கூடிய 20 கேரள அரசு பஸ்களும் இன்று இயக்கப் படவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி சுகுமாரன் கூறினார்.

    இதேபோல கால்டாக்சி, வேன், மேக்சி கேப், டெம்போ, லாரி என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல டூரிஸ்ட் வேன், டாக்சி, டெம்போ தொழிலாளர்கள் டவுன்ஹாலில் மறியல் போராட்டம் நடந்தது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், மேல் குன்னூர், கீழ் குன்னூர், வெலிங்டன், சிம்ஸ் பூங்கா, ஒட்டு பட்டறை, அரவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை.

    இதே போல் சுற்றுலா டாக்சிகள், வேன்கள் போன்றவையும் இயங்கவில்லை. அவைகள் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்கள் ஓடாததால் இன்று காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    வேன்கள், டாக்சிகள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டியிலும் இன்று ஆட்டோக்கள், சுற்றுலா வேன்கள் குறைந்த அளவே இயங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள், வேன்கள் வழக்கம் போல் ஓடியது. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    Next Story
    ×