search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று ஸ்டிரைக்
    X

    திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று ஸ்டிரைக்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #IndianMedicalAssociation #DoctorsStrike
    திருச்சி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 44 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 32 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் பணியாற்றும் 1500 டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து முன்னாள் மாநில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் குணசேகரன், மாநில துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் கூறியதாவது :-

    மருத்துவ உலகின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் இந்த ஆணையத்தில் உள்ள 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மற்றவர்கள் நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

    அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்காது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத நிர்வாக ஒதுக்கீடு 50 சதவீதமாக உயரும். அதற்கான கட்டணத்தை தனியார் மருத்துவ கல்லூரியே நியமிப்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மாற்றுமுறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்திற்கு எதிரானது. எனவே தான் இந்த ஆணையத்தை கைவிட வலியுறுத்துகிறோம்.

    மத்திய அரசு கைவிடவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #IndianMedicalAssociation #DoctorsStrike
    Next Story
    ×