என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டிரைக் காரணமாக லாரிகள் கோச்சடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
    X
    ஸ்டிரைக் காரணமாக லாரிகள் கோச்சடையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

    2-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் - ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

    2-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் மதுரையில் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    மதுரை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் லாரிகள் சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் 4500 லாரிகள் உள்ளன. இதில் 4 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சரக்கு புக்கிங் பணிகளும் நிறுத்தப்பட்டன.

    அனைத்து லாரிகளும் விரகனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகளும் ஆங்காங்கே சரக்குகளுடன் நிற்கின்றன.

    மதுரையில் இருந்து தினமும் பல்வேறு சரக்குகள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை சந்தைகளுக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் 2 நாட்களுக்கு ஒருமுறை லாரிகளில் வரும். நேற்று முன்தினம் சரக்கு வந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

    லாரிகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டு அவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் லாரிகள் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  #LorryStrike




    Next Story
    ×