search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடவிநயினார் அணை நிரம்பி வழிகிறது - பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு
    X

    அடவிநயினார் அணை நிரம்பி வழிகிறது - பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.75 அடியாக அதிகரித்து உள்ளது. #PapanasamDam
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, அடவிநயினார் அணை என மொத்தம் 11 அணைக்கட்டுகள் உள்ளன.

    தொடர் மழை காரணமாக இதில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு ஆகிய 5 அணைகள் நிரம்பின. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 112.75 அடியாக இருந்தது. இன்று இது மேலும் 2 அடி உயர்ந்து 114.75 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2821 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 128.12 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79.40 அடியாகவும் உள்ளன. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 9.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 11.51 அடியாகவும் உள்ளது.

    தொடர் மழையினால் செங்கோட்டையை அடுத்த பண்பொழி அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கட்டுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கார்சாகுபடிக்காக கடந்த வாரம் 22-ம் தேதி முதல் 105 நாட்களுக்கு அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் 132 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை கொட்டி தீர்த்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்து விநாடிக்கு 160 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. இதை தொடர்ந்து அடவிநயினார் அணை தனது முழுமையான கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதைதொடர்ந்து தண்ணீர் வழிந்தோடி வருகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    இதனால் இந்த அணைக்குட்பட்ட கரிசல் மற்றும் மேட்டுக்கால்வாய் பாசன அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இதனால் குளம் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடவிநயினார் அணை தொடர்ந்து 8 ஆண்டுகளாக நிரம்பி வழிந்தோடி வருவதால் அதனைபார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுபுற மக்கள அணைக்கட்டு பகுதியை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.

    நெல்லை மாவட்டம் முழுவதும் அணைப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் இன்று காலைவரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார் அணை- 30, கடனா அணை-12,குண்டாறு அணை- 12, மணிமுத்தாறு - 6.4, பாபநாசம் - 3, சிவகிரி - 3, தென்காசி - 2, அம்பை- 1.4, செங்கோட்டை - 1, சேர்வலாறு - 1, கருப்பாநதி - 1. #PapanasamDam
    Next Story
    ×