என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    தருமபுரி அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

    தருமபுரி அருகே நள்ளிரவில் 2 மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வருமான வரித்துறை சோதனை சாவடி அருகே தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சோதனை சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும் வந்தது.

    அப்போது அங்கு நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த 2 மினிலாரிகளையும் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 லாரிகளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகரைச் சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரையும், போச்சம்பள்ளி அணைகொடி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (36) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 மினிலாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை 309 அட்டை பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மதன்பாய் என்பவரிடம் இருந்து இந்த குட்கா பொருட்களை லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் 2 மினி லாரிகளின் டிரைவர்களை கைது செய்து 309 அட்டைபெட்டிகளில் இருந்த 7 லட்சத்து 24 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளையும், 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள மதன்பாய் மற்றும் மினிலாரிகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்கள் மதுரையில் எந்த வியாபாரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தனர் என்றும், அதன் உரிமையாளர் யார்? என்ற விபரம் குறித்தும் போலீசார் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை மினிலாரிகளில் கடத்திவந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×