search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைப்பணி விரைவு படுத்தப்படுகிறது
    X

    சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைப்பணி விரைவு படுத்தப்படுகிறது

    சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    சென்னை-சேலம் இடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் புதிதாக 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த சாலை 277 கி.மீ தூரம் கிராமங்கள், காடுகள், வயல்கள் வழியே அமைக்கப்படுகிறது.

    இதேபோல் சென்னை- பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் சாலையில் வாகன நெருக்கடி உள்ளது. நீண்ட தூரம் சுற்றிச்செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க புதிதாக சென்னை-பெங்களூர் இடையே 6 வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க சில வருடங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. முதலில் இதன் தூரம் 240 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிலப் பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் சில இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டு 265 கி.மீ ஆக இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலைப்பணியை துரிதப்படுத்தவும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளது.

    பெங்களூர் ஒசகோட்டையில் இருந்து தொடங்கும் இந்த சாலை கர்நாடகத்தின் கோலார், ஆந்திராவின் சித்தூர், தமிழகத்தின் வேலூர், வாலாஜாபேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் இணைகிறது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் வாகனங்கள் ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என சுற்றிச் செல்வது தவிர்க்கப்பட்டு நேரடியாக சித்தூர், கோலார் வழியாக பெங்களூர் சென்றடையலாம்.

    இந்தச்சாலைக்கான நிலம் எடுப்பு பணி கர்நாடகத்தில் தொடங்கிய போது எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தற்போது நிலம் எடுப்பு பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த சாலைக்காக தமிழகத்தில் வேலுர் மாவட்டம் ஆற்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மகி மண்டலம் வனப்பகுதியில் 5.42 ஹெக்டேர் நிலம் எடுக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் அனுமதி கிடைத்ததும் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கும்.

    சமீபத்தில் வனத்துறை சம்பந்தமான உயர் அதிகாரிகளும் நிபுணர்களும் இந்தப் பகுதியை பார்வையிட்டனர். அப்போது அடர்ந்த வனங்களில் மரங்களை அழிக்காமல் வனப்பகுதியையொட்டி மாற்று வழியில் சாலையை அமைக்க ஒப்புதல் அளித்தனர்.
    Next Story
    ×