என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்
    X

    மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

    மண்டபம் கடற்கரையில் 500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்து தெரியவந்தது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடலோர பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே சிலர் சந்தேகத்துக்கிடமாக வல்லத்துடன் (படகு) நிற்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கடலோர காவல் படை நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் கணேஷ், சரவண குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அப்போது அங்கு நின்ற சிலர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச்சென்ற வல்லம் (படகு) மற்றும் 50-க்கும் மேற்பட்ட மூடைகளை கடலோர காவல்படையினர் மீட்டனர். அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    மூடைகளில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகள், வல்லத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. கடல் அட்டைகள் வைக்கப்பட்டு இருந்த வல்லம் வேதாளையைச் சேர்ந்த மரைக்காயர் என்பவருக்கு சொந்தமானது.

    கடல் அட்டைகளை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×