search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான வாலிபர் தில்லைநாதன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    திருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான வாலிபர் தில்லைநாதன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    திருக்கோவிலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் தில்லைநாதன் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆராயி, அவரது மகள் தனம், மகன் 4-ம் வகுப்பு படித்து வந்த சமயன் ஆகிய 3 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் மாணவன் சமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயமடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்த தில்லைநாதனையும், இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தனர்.

    மேலும் விசாரணையில் கைதான தில்லைநாதன், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வீடு புகுந்து தனியாக இருக்கும் பெண்களை தாக்கி நகை பறித்தல், பலாத்காரம் செய்தல் என 81 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இவருடைய செயல்களை தடுக்கும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தில்லைநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தில்லைநாதன் மீது விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துமாணிக்கம் மற்றும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    விரைவில் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×