search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் தீக்குளிப்பு - சேலம் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்
    X

    காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் தீக்குளிப்பு - சேலம் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்

    காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் குழந்தை இறந்து 4 மாதங்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னையில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36). இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஞானசாய் என்ற மகன் உள்ளான்.

    தேன்மொழி, திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

    இதனால் பிரசவத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    பெற்றோர் வீட்டில் இருந்தப்படி அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வயிற்றில் இருக்கும் சிசு நலமாக இருக்கிறதா? அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது? என்பது குறித்து பரிசோதித்து வந்தார்.

    மேலும் சிசுவின் வளர்ச்சிக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், ஊட்டச்சத்துக்களும் சாப்பிட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழி கடந்த பிப்ரவரி மாதம் பிரசவ வலியால் அலறி துடித்தார். அவரை, பெற்றோர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டது. மயக்கம் தெளிந்த பிறகு குழந்தை எங்கே? என்று கேட்டார். மகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என பயந்து குழந்தை இறந்ததை பற்றி கூறாமல் டாக்டர்கள் இங்குலேட்டரில் வைத்திருப்பதாக தெரிவித்தனர். எனினும் சந்தேகம் அடைந்து தேன்மொழி பல முறை அழுது கொண்டே கேட்டார். குழந்தை இறந்த வி‌ஷயத்தை பெற்றோர் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழி கதறி அழுதார். குழந்தை இறந்து விட்டதே கணவரிடம் என்ன? பதில் சொல்வேன் என கதறி அழுதார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறினார்கள்.

    நேற்று மாலை தேன்மொழி பழையபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து திடீரென தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேன்மொழியின் நிலைமை கவலைகிடமாக இருந்ததால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண் போலீஸ் தேன்மொழிக்கு தீக்காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம் என்றனர்.

    பெண் போலீஸ் தீக்குளிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை இறந்து 4 மாதங்களுக்கு பிறகு அவர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவரது கணவர் சக்திவேல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×