search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலையில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஏழுமலை
    X
    தலையில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஏழுமலை

    ராயப்பேட்டையில் போலீஸ்காரர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

    சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 6பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 10 மணி அளவில் தகவல் வந்தது.

    இதனையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஏழுமலை உடனடியாக அங்கு விரைந்து சென்றார்.

    அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ஏழுமலை அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ஏழுமலையை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ஏழுமலையை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

    அவர்களிடம் இருந்து ஏழுமலை தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் அக்கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி அரவிந்தன் போலீஸ்காரர் ஏழுமலையை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி அரவிந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் ஏழுமலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக ரவுடி அரவிந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Tamilnews
    Next Story
    ×