search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்திவாசு உடன் அவரது தாய்
    X
    மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்திவாசு உடன் அவரது தாய்

    உலக அழகி பட்டம் வெல்வதே எனது லட்சியம் - மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸ்

    உலக அழகி பட்டத்தை வெல்வதே எனது லட்சியம் என்று தனது சொந்த ஊரான திருச்சி வந்த மிஸ் இந்தியா அழகி அனுகீர்த்தி வாஸ் கூறினார். #MissIndia #AnuKeerthiVas
    திருச்சி:

    சொந்த ஊரான திருச்சி வந்த மிஸ் இந்தியா அழகி அனுகீர்த்தி வாசுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    1947-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்துள்ள மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் இதுவரை 3 பேர் தமிழகத்தில் இருந்து இந்திய அழகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1947-ல் நடந்த முதல் இந்திய அழகி போட்டியில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த எஸ்தர் விக்டோரியா ஆபிரகாம் இந்திய அழகி பட்டம் வென்றார். 1952-ல் தமிழகத்தை சேர்ந்த இந்திராணி ரக்மான் முதல் முறையாக இந்திய அழகி பட்டம் வென்றார். அதன் பிறகு 1977-ல் நளினி விஸ்வநாதனுக்கு இந்திய அழகி பட்டம் வழங்கப்பட்டது. 

    இவர்களுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்ட பெல்லி ஹோயே 1991-ல் இந்திய அழகி பட்டம் வென்றார். 1991-க்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை சேர்ந்த திருச்சி காட்டூர் சரஸ்வதி நகர் அனுகீர்த்தி வாஸ் 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அனுகீர்த்தி வாஸ் குடும்பம் திருச்சி காட்டூர் சரஸ்வதி நகரில் வசித்து வருகிறது. இவரது தாயார் செலினா, தந்தை பிரசாத், ஒரே தம்பி கவுதம் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    தாய் செலினா, பாட்டி கோமளா ஆகியோருடன் சரஸ்வதி நகர் வீட்டில் வசித்து வந்த அனுகீர்த்தி வாஸ் திருச்சி மான்போர்ட் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் பெல் ஆர்.எஸ்.கே. பள்ளியில் 11,12-ம் வகுப்பும் படித்தார். அதன்பிறகு சென்னை லயோலா கல்லூரியில் படித்து வந்தவர் இந்திய அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார்.



    இந்திய அழகி பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக நேற்று திருச்சி காட்டூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்த அனுகீர்த்தி வாசுக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் படித்த பள்ளியில் நடந்த விழாவிலும் அவர் பங்கேற்றார்.

    அனுகீர்த்தி வாஸ் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் அவரை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மக்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட அவர், தாய், பாட்டி ஆகியோரிடம் ஆசி பெற்றார். அதன் பிறகு மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக நிருபர்களிடம் உலக அழகி பட்டத்தை வெல்வதே எனது லட்சியம் என தெரிவித்தார். உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அனுகீர்த்தி வாஸ் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1994-ல் இந்திய அழகியாக பட்டம் வென்ற சுஸ்மிதா சென் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும், 2000-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்ற லாரா தத்தா உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிறகு திருச்சியை சேர்ந்த இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுகீர்த்தி வாஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டால் திருச்சி மக்களுக்கு பெருமையாக இருக்கும் என காட்டூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.  #MissIndia #AnuKeerthiVas



    Next Story
    ×