search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் ஏற்றிய லாரி வெளியே வந்த காட்சி.
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் ஏற்றிய லாரி வெளியே வந்த காட்சி.

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 25 லாரிகள் மூலம் 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Sterlite #Sulfuricacid
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்ப‌ட்டது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையிலான குழு மூலமாக ரசாயன கசிவை உறுதி செய்தார். குடோனில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் கசிவாகி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை குடோனில் இருந்து கசிவான கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தன. பிரத்யேக பாதை மூலமாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நிபுணர் குழு மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை 15 டேங்கர் லாரிகள் மூலம், சுமார் 350 டன் எடையுள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது. நேற்று மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் மேலும் 100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

    அகற்றப்பட்ட கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இன்று காலையில் மேலும் 5 லாரிகள் ஆலைக்குள் சென்றன. அந்த லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மதியம் நிலவரப்படி சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமிலத்தை டேங்கர் லாரிகளில் நிரப்பி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.



    இது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் உடனுக்குடன் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முழுமையாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என்றார். #Sterlite #Sulfuricacid

    Next Story
    ×