search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டில் கொட்டப்பட்டு கிடந்த ஏ.டி.எம். கார்டு.
    X
    ரோட்டில் கொட்டப்பட்டு கிடந்த ஏ.டி.எம். கார்டு.

    பொள்ளாச்சியில் ரோட்டில் கொட்டப்பட்டது போலி ஏ.டி.எம். கார்டுகளா? - போலீசார் தீவிர விசாரணை

    பொள்ளாச்சியில் சாலையில் கொட்டப்பட்டு கிடந்தது போலி ஏ.டி.எம். கார்டுகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள நல்லூர் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து ஆர். பொன்னாபுரம் செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலையில் நேற்று மாலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் கொட்டப்பட்டு கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு சென்று ஏ.டி.எம். கார்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த ஏ.டி.எம். கார்டுகள் தனியார் வங்கியின் விசா கார்டுகள் என்பது தெரிய வந்தது.



    இந்த கார்டுகள் இந்த ஆண்டு வரை செல்லும் வகையில் உள்ளது. ஆனால் அதில் வாடிக்கையாளர்கள் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இதனால் அவைகள் போலி கார்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தனியார் வங்கிக்கு இந்தியா முழுவதும் 119 கிளைகள் தான் உள்ளது. பொள்ளாச்சியிலும் ஒரு கிளை உள்ளது.

    இந்த கிளையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கார்டுகள் சாலையில் கொட்டப்பட்டு கிடந்தது சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    இந்த தனியார் வங்கி கிளை சார்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்க இந்த ஏ.டி.எம். கார்டுகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை விவசாயிகள் சற்று சுரண்டி வங்கி கிளை அருகே உள்ள குப்பை தொட்டியில் போட்டதாகவும், அவைகளை குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லும் போது வழியில் தவறி விழுந்து இருக்கலாம் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்டுகள் கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து 20 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 40 லட்சம் திருட்டு போனது.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட யாரும் இன்னும் போலீசில் சிக்கவில்லை.

    எனவே பொள்ளாச்சியில் சிக்கிய ஏடி.எம். கார்டுகளும் போலியாக தயாரிக்கப்பட்டு பணம் திருட பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏ.டி.எம். கார்டில் குறிப்பிடப்பட்டு உள்ள வங்கி அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    Next Story
    ×