search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்டு தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்.
    X
    கைது செய்யப்பட்டு தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்.

    நடிகர் மன்சூர் அலிகான் சேலம் சிறையில் அடைப்பு

    8 வழிசாலை போட்டால் 8 பேரை வெட்டி கொல்வேன் என பேசியதால் தொடரப்பட்ட வழக்கில் கைதான நடிகர் மன்சூர்அலிகான் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    காடையாம்பட்டி:

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களை கடந்த மாதம் 3-ந் தேதி நடிகர் மன்சூர் அலிகான் சந்தித்து பேசினார்.

    அப்போது பேட்டி கொடுத்த அவர் 8 வழி சாலை போட வருவோரில் 8 பேரை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக கூறினார். இது குறித்து தும்பிப்பாடி வி.ஏ.ஓ. மாரிமுத்து தீவட்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நடிகர் மன்சூர்அலிகான் மீது மக்களை கலவரத்திற்கு தூண்டுதல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல், குற்றம் செய்ய மக்களை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீசார் மன்சூர் அலிகானை கைது செய்து சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்ததும் இரவு 7 மணியளவில் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கன்னியாதேவி முன்பு நடிகர் மன்சூர் அலிகானை ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கன்னியாதேவி உத்தரவிட்டார். அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னையில் இருந்து சேலம் வரும் வழியில் ஆத்தூர் புறநகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    8 வழி சாலை நாசமாக்கும் திட்டம். 10 ஆயிரம் கோடியில் சாலை அமைத்து 20 ஆயிரம் கோடி சுங்க கட்டணம் வசூலிப்பார்கள். தமிழகத்தை ராவண பூமி என மத்திய அரசு புறக்கணிக்கிறது.

    8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக அறவழியில் தொடர் போராட்டம் நடத்த ஜாதி, மதம் கடந்து தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், அமைச்சர்களுக்கு லாரி, பொக்லைன் உள்ளதால் 300 கோடி ரூபாய் சாலைக்கு 900 கோடி ரூபாய் ஒப்பந்தம் அறிவித்து சாலை போட்டு உள் நோக்கத்துடன் கொள்ளையடிக்கிறார்கள்.

    முதல்வர் பழனிசாமி 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும். ஜெயலலிதா போன இடம் கூட தெரியவில்லை. சிலர் பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுகின்றனர். அராஜக அ.தி.மு.க. ஆட்சி நீடிக்காது.

    சேலம்-உளுந்தூர் பேட்டை 4 வழிச்சாலையில் மரம் வளர்த்து இந்த சாலையை மேம்படுத்துவது தான் இதற்கு மாற்று வழி. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAlikhan
    Next Story
    ×