search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது.
    X
    மலைப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது.

    ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக காட்டுத்தீ

    ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீயினால் மலையில் உள்ள புல் வகைகள் மட்டுமல்லாமல், அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் நாசமானது.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அய்யனார்கோவில், வாளைகுளம், ராஜாம் பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோவில் என 9 பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இதில் அய்யனார் கோவில் பகுதியில் உள்ள ராஜாம்பாறை, கோட்டைமலை என்ற பகுதியில் திடீரென நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது.

    ஒரு பகுதியில் பற்றிய காட்டு தீ, வனப்பகுதியில் வீசிய பலமான காற்றால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியது. தற்போது மலை முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

    இதனால் மலைப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தால் மலையில் உள்ள புல் வகைகள் மட்டுமல்லாமல், அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் வன விலங்குகளும் இந்த விபத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்த வன காப்பாளர்கள், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பழங்குடியினர் என 50 பேர் கொண்ட குழுவினர் தீ எரியும் பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் தீ வேகமாக பரவும் என்பதால், அருகில் உள்ள சாப்டூர், வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினர் 50 பேரை வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தீ விபத்து குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, தேனி வனப்பகுதியில் உள்ள லோயர் கேம்பிலிருந்து கயத்தாறு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மின்சாரம் கொண்டு செல்ல பயன்படுத்தும் எந்திரத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டு மலைப்பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×