search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    X

    கரூர் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    கரூர் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். #AmaravathiRiver
    கரூர்:

    அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் அமராவதி அணையில் தண்ணீர் அதிகளவு நிரம்பும் போது தான் காட்டாற்று வெள்ளமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீரை வைத்து கரூர் கடைமடை பகுதியில் விவசாயம் நடந்தது.

    தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் கரூர் அமராவதி ஆறு மணற்பாங்காக தான் காட்சி தருகிறது. மேலும் குடிநீருக்காக ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீரின் நீர்மட்டம் குறைந்திருப்பதால் தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர ஆற்றில் மணல் திருட்டு பிரச்சினையும் ஆங்காங்கே நடப்பதால் இயற்கை வளம் சுரண்டப்படுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    இந்த நிலையில் கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலந்து தான் ஓடுகிறது. இதன் காரணமாக கரூர் அமராவதிபாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் மூக்கினை பிடித்து கொண்டே செல்வதை காண முடிகிறது. மேலும் கழிவுநீர் ஒருபுறம் ஓடினாலும், மற்றொரு புறம் சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் லைட்அவுஸ் பாலத்தின் கீழ்புறத்தில் செம்பழுப்பு நிறத்திலும், கருமை நிறுத்திலும் அருகருகே கழிவுநீர் செல்வதாக கூறுகின்றனர். தூய்மையான நீரோடிய சென்னை கூவம் நதி சாக்கடையாய் மாறிபோனதற்கு காரணம் கழிவுநீர் அதில் விடப்பட்டதனால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே கரூரின் நீராதார பொக்கிஷமான அமராவதி ஆற்றினை வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தும் விதமாக அதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாயப்பட்டறை கழிவுநீர் அதில் கலக்கிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர் அமராவதி ஆற்றின் நிலை குறித்து சமானிய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளரும், சமூக ஆர்வலருமான சண்முகம் கூறுகையில், கரூர் செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், பெரியஆண்டாங்கோவில், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறி பாசனவாய்க்கால் மற்றும் ஆறுகளில் கலக்கிறது. இதன் காரணமாக அந்த இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் மாசடைகிறது. விவாசய நிலங்களில் இந்த நீரை பாய்ச்சுவதால் பயிர்கள் உற்பத்தி குறைகிறது. இந்த நீரில் மக்கள் குளிப்பதால் தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இனி அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகளால் அந்த நீரும் மாசடைய வாய்ப்பிருக்கிறது. எனவே அமராதி ஆற்றில் கழிவுநீர், சாயக்கழிவுநீரை திறந்து விடுபவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 
    Next Story
    ×