search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அமைதி திரும்பியதையடுத்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிக்கை குறைப்பு
    X

    முழு அமைதி திரும்பியதையடுத்து தூத்துக்குடியில் போலீஸ் எண்ணிக்கை குறைப்பு

    தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.

    அப்போது நடந்த‌ துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வந்தபோதே தூத்துக்குடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். 22-ந் தேதி போராட்டம் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பே கூடுதலான போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலியாக ஏற்பட்ட பதட்ட நிலையினால் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி நகரம் மற்றும் மாவட்ட பகுதிகள் முழுவதும் 41 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.

    இந்தநிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியுள்ளது.

    இதையடுத்து தாளமுத்து நகர் பகுதியில் தங்கியிருந்த திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போதைய சூழலில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 கம்பெனிகள் போலீசார் மட்டுமே பாதுகாப்பில் உள்ளார்கள். அவர்களும் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். மேலும் தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டிருந்த 6 வஜ்ரா வாகனங்கள், 4 வருண் வாகனங்கள் உள்ளிட்ட 70 போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களும் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே முழு அமைதி திரும்பினாலும் ஒரு நபர் ஆணைய விசாரணை முகாம், சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருவதாலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இருக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் நேற்று தூத்துக்குடியில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி பகுதியில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×