search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுந்தர், கிதர் முகமது, ஆனந்த்
    X
    சுந்தர், கிதர் முகமது, ஆனந்த்

    கோவையில் கோடிக்கணக்கில் அச்சடித்த வழக்கு - கள்ளநோட்டு கும்பல் தலைவன், 2 பேரை காவலில் எடுக்க முடிவு

    கோவையில் கோடிக்கணக்கில் அச்சடித்த வழக்கு தொடர்பாக கள்ளநோட்டு கும்பல் தலைவன், 2 பேரை போலீசார் காவலில் எடுக்க கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து கோடிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    காரமடையை சேர்ந்த சுந்தர்(38) என்பவர் இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தி தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

    ஆனால் சுந்தர் போலீசாரிடம் சிக்காமல் நேற்று மாலை கோவை 7-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் பாண்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சுந்தர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ஆனந்த் கள்ள நோட்டுகளை அச்சடிக்க அறை மட்டுமே எடுத்து கொடுத்தேன். இதற்காக எனக்கு குறிப்பிட்ட தொகை தந்தார்கள். வேறு எதுவும் எனக்கு தெரியாது என கூறி இருந்தார். இதேபோல கிதர் முகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சுந்தருக்கு தான் எல்லாம் தெரியும். அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை மார்க்கெட் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புழக்கத்தில் விட்டது தான் எனது வேலை, வேறு எதுவும் தெரியாது என கூறினார். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் குறித்து விசாரித்த போது கிதர்முகமது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    கும்பல் தலைவன் சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் நவீன காகிதங்களை வட மாநிலங்களில் இருந்து வர வழைத்து கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். நக்சல்கள், மாவோயிஸ்டுகளுக்கும் கள்ள நோட்டுகளை சப்ளை செய்துள்ளதாக தகவல்கள் பரவியது.

    இந்த கும்பல் இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார்கள்? யார்-யார் மூலமாக அவற்றை புழக்கத்தில் விட்டார்கள்? எந்தெந்த இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டது? இவர்களின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்த சுந்தர் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    3 பேரையும் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரித்தால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கருதுகின்றனர். இதற்காக கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×