search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் - மீனவர் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஜீவாநகரில் உள்ள அன்னை தெரசா மக்கள் மன்றத்தில் நேற்று நெல்லைதூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், ஊத்தக்குழி, உவரி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, புன்னக்காயல் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தூத்துக்குடி திரேஸ் புரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறி நுழைந்து ஜான்சி என்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததை கொலை வழக்காக பதிவு செய்து, உடனே அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு கடற்கரை பகுதியில் அரசு முயற்சி செய்து வரும் சாஹர் மாலா திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது. இதையும் மீறி அந்த ஆலையை திறந்தால் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    துப்பாக்கி சூட்டின் போது படுகாயம் அடைந்த மக்களுக்கு தலா ரூ.50 லட்சமும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடியும் கொடுக்க வேண்டும். அதேபோல் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய அனைத்து போலீசார் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு நீதி விசாராணை நடத்தப்பட வேண்டும்.

    கடற்கரை கிராமங்களில் கதிரியக்கத்தை அளவீடு செய்யும் கருவியை அரசாங்கம் நிறுவ வேண்டும். தடை செய்யப்பட்ட போக்குவரத்து சேவையை அனைத்து ஊர்களுக்கும் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

    கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடத்தில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    Next Story
    ×