என் மலர்
செய்திகள்

போலீஸ் நிலையத்தில் கேக் ஊட்டிய விவகாரம்: பெண் போலீஸ்-ஏட்டு உள்பட 4 பேர் பணியிட மாற்றம்
பரமக்குடி:
தமிழகத்தில் தொடர்ந்து சில போலீசாரின் வரம்பு மீறிய செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய போலீசார் பொது இடத்தில் தரக்குறைவாக நடந்து கொள்வதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் கண்கூடாக நடந்து வருகிறது.
அதுவும் இன்றைய நவீன காலத்தில் போலீசார் செய்யும் சிறு தவறுகூட சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. இதனால் பொதுமக்கள்-போலீசார் இடையேயான நல்லுறவு கேள்விக்குறியாகி விடுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி பொதுஇடத்தில் முதியவரை தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ், ஏட்டுக்கு கேக் ஊட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமக்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் முத்துப்பாண்டிக்கு, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள் கேக் ஊட்டினார். அப்போது அருகில் இருந்த போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் இதனை படம் எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் போலீஸ் நிலையத்தில் பணி நேரத்தில் போலீஸ்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஏட்டு முத்துப்பாண்டி, பெண் போலீஸ் ஏட்டு மாரியம்மாள், போலீஸ்காரர்கள் ராஜ்குமார், முத்துவேல்ராஜன் ஆகியோர் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். #tamilnews