search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்து வெடிகுண்டு
    X
    பந்து வெடிகுண்டு

    வந்தவாசியில் சிவன் கோவிலில் வெடிகுண்டு - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

    வந்தவாசி சிவன் கோவிலில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் ஜலகண்டேஸ்வரர், பெருமாள் சன்னதி உள்ள பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது. சமீபத்தில் தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது, பிரகாரத்தில் பந்து வடிவில் உள்ள ஐஸ்கிரீம் டப்பா கிடந்தது.

    எப்போதும், கோவிலில் இருக்கும் பவுனம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, குழந்தைகள் விளையாடும் பந்து என்று நினைத்து அதை எடுத்து கோவிலில் உள்ள பாறை மீது வைத்தார்.

    அப்போது, அந்த பந்தில் இருந்து வெடி மருந்துகள் கீழே கொட்டின. இதனால் வெடிகுண்டு என்று நினைத்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, கோவிலில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்ததும் வந்தவாசி டி.எஸ்.பி. பொற்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வெடி மருந்து நிரப்பப்பட்ட பந்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கற்களையே பிளக்கும் வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

    சமூக விரோத கும்பல் யாரேனும் சதி திட்டம் தீட்டி கோவிலில் பந்து வடிவிலான வெடிகுண்டை பதுக்கி தாக்குதலுக்கு நடத்த முயற்சித்தனரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, வெடி மருந்து பந்து மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி மருந்து பந்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் வந்தவாசி பகுதியில் பெரும் பீதியும், பரபரப்பான சூழலும் காணப்படுகிறது.
    Next Story
    ×