search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் சுரேஷ்.
    X
    அரசு பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் சுரேஷ்.

    திண்டுக்கல்லில் சீருடை வழங்காததை கண்டித்து அரசு பஸ் முன் டிரைவர் தர்ணா

    திண்டுக்கல்லில் இன்று காலை சீருடை வழங்காததை கண்டித்து அரசு பஸ் முன்பு டிரைவர் தர்ணா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு ஊர்காலன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் கிளை 3-ல் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு செல்வதற்காக பஸ்சை எடுத்தார். அப்போது அவர் சீருடை அணியவில்லை. இதனை அறிந்த போக்குவரத்து பணிமனை உதவி பொறியாளர் தினகரன் விரைந்து வந்து சுரேசை பஸ்சை எடுக்க விடாமல் தடுத்தார்.

    இதனால் டிரைவருக்கும், உதவி பொறியாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரைவர் சுரேஷ் பஸ் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சீருடை வழங்காததை கண்டித்து கோ‌ஷம் போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து நான் நிரந்தர பணியாளராக பணியாற்றுகிறேன். ஆண்டுக்கு 2 செட் சீருடை (2 பேண்ட், 2 சட்டை) வழங்க வேண்டும். ஆனால் இது கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் சீருடை தைப்பதற்கான தையல் கூலியும் வழங்கவில்லை. இது குறித்து கிளை மேலாளர் மூலம் மதுரை பொது மேலாளருக்கு மனு கொடுத்துள்ளேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    சீருடை வழங்காததை கண்டித்து கம்பம் யூனிட் 2-ல் பாலகிருஷ்ணன் என்பவரும் போராட்டம் செய்துள்ளார். இது போன்ற நிலை திண்டுக்கல் கோட்டம் முழுவதும் உள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  #Tamilnews
    Next Story
    ×