என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் விரைவில் 5 ஆயிரம் புதிய அரசு பஸ்கள் இயக்கப்படும்- எம்.ஆர்.விஜயாபாஸ்கர் தகவல்
திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் இணைந்து நடத்திய டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த ஊழியர்களுக்கு பாராட்டு விழா இன்று மலைக்கோட்டை டெப்போவில் நடந்தது.
விழாவிற்கு திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் இளங்கோவன் வரவேற்றார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் 500 ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து 4-வது ஆண்டாக மண்டல அளவில் டீசல் செயல்திறனில் சேமிப்பை ஏற்படுத்தி விருது பெற்றுள்ளது. இதற்காக உழைத்த போக்குவரத்து துறை ஊழியர்களை மனதார பாராட்டுகிறேன்.
கடந்த 5.69 ஆக இருந்த டீசல் செயல்திறன் தற்போது 5.71 என்ற நிலை அளவில் உயர்ந்திருப்பதற்கு பாராட்டுகிறேன். ஆனால் டீசல் சிக்கனம் என்பது எப்போதுமே மிகவும் அவசியம். டீசல் விலை உயர்ந்துவிட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து நிர்வாக செலவும் அதிகரித்துள்ளது.
இதற்காககவும் பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் அரசு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனாலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் மிகக்குறைவு. போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிதாக 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க உத்தரவிட்டார். அவர் மறைந்த பிறகு தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நிதியாண்டில் மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே விரைவில் தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews