என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாதாரண பஸ்களை சிறப்பு பஸ்களாக மாற்றி அதிக கட்டணம் வசூல்- பயணிகள் புகார்
    X

    சாதாரண பஸ்களை சிறப்பு பஸ்களாக மாற்றி அதிக கட்டணம் வசூல்- பயணிகள் புகார்

    வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண அரசு பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கி அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு போக்கு வரத்து கழகங்கள் மூலம் 21,928 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானதால் கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது.

    பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பஸ் கட்டண உயர்வை மறந்து மக்கள் வழக்கம்போல் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் சாதாரண அரசு பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கி அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை உள்பட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் போக்குவரத்து கழக சாதா பஸ்களில் போர்டில் மட்டும் ஸ்பெ‌ஷல் பஸ் என்று எழுதி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு சாதாரண பஸ்சில் செல்ல ரூ.270தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ‘ஸ்பெ‌ஷல் பஸ்’ என்று எழுதி ரூ.405 கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

    புது பஸ்சாக இருந்தால் கூட பரவாயில்லை. ஓட்டை உடைசலான பழைய பஸ்களை சிறப்பு பஸ் என எழுதி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எப்படி ஏற்க முடியும் என்று மக்கள் குமுறுகின்றனர்.

    பொதுவாக திருவிழா காலங்கள், பண்டிகை காலங்களில் தான் ஸ்பெ‌ஷல் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போது எந்த பண்டிகையும் இல்லாத நாட்களில் ஸ்பெ‌ஷல் பஸ் இயக்குவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாக பயணிகள் குமுறுகின்றனர்.

    பஸ் கட்டண உயர்வு காரணமாக பலர் ரெயில்களில் பயணம் செய்வதால் எதிர்பார்த்த அளவுக்கு கட்டண வசூல் அமையவில்லை. இதனால் வருமானத்தை கூட்டுவதற்காக மறைமுகமாக சாதாரண பஸ்களுக்கு ஸ்பெ‌ஷல் பஸ் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    இதற்கு தனியாக அரசு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    இதுபற்றி பயணிகள் அரசுக்கு புகார் செய்து வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டதற்கு பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கமான நடைமுறைதான் என்று தெரிவித்தனர். #tamilnews

    Next Story
    ×