என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து 30 பேர் இன்று வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்றனர்.
இன்று தை மாத அமாவாசை என்பதால் இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுத்து விட்டு குளித்து விட்டு வருவதற்காக 30 பேரும் ஒரு படகில் கடலுக்குள் சென்றனர். அப்போது சன்னதி கடலில் சென்றவுடன் ஒவ்வொருவரும் கடலுக்குள் இறங்கி குளித்தனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். இதில் கடலில் குளித்து கொண்டிருந்த 19 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் மூச்சு திணறி கடலில் தத்தளித்தனர்.
இதில் ஆறுகாட்டுத்துறை பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 17), பரத் (18), யோகராஜ் (17) ஆகிய 3 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் பலியான 3 பேர் மற்றும் மூச்சு திணறலில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே கடலில் மூழ்கிய 12 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதனால் படகுகளில் சென்று மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர் கனிஷ்கரின் (18) உடலை மீனவர்கள் மீட்டனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இதனால் கடற்கரை முன்பு கிராம மக்கள் திரண்டு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் குளிக்க சென்ற 4 வாலிபர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி ஆறுக்காட்டு துறை மீனவ கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story






