search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கவர்னர் கிரண்பேடி புதுவை வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு
    X

    கவர்னர் கிரண்பேடி புதுவை வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

    கவர்னர் கிரண்பேடி புதுவை வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டி உள்ளார்.

    புதுச்சேரி:

    டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி புதுவை மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அவரது செயலால் புதுவை மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். புதுவை அரசோடு கவர்னர் மோதல் போக்கையே கடை பிடிக்கிறார்.

    அதுமட்டுமின்றி அதிகாரிகளை வசை பாடுவதும் தரக்குறைவாக பேசுவதும் அவருடைய வாடிக்கையாக உள்ளது. அவருக்கு இது குறித்து பல முறை கடிதம் எழுதி அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். யாரையும் தரக்குறைவாக பேசக்கூடாது என்று கேட்டுக் கொண்டும் அவர் எதையும் மதிப்பதாக தெரியவில்லை.


    விதிமுறைகளை படிக்காமல் தனக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்ற நினைப்பில் மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் குறுக்கிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முற்றிலும் தடையாக இருக்கிறார்.

    தீபாவளி பண்டிகைக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டம் புதுவை மாநிலத்தில் உள்ளது. இந்த கோப்பு கவர்னரிடம் சென்றால் வேண்டும் என்று காலதாமதப்படுத்துகிறார்.

    இலவச திட்டங்களுக்கு கோப்பு அனுப்பினால் கிடப்பில் போடுகிறார். கவர்னர் நிர்வாகியாக செயல்படாமல் மாநில வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார்.

    கவர்னரின் நடவடிக்கை குறித்து பிரதமர், உள்துறை, ஆகியோருக்கு புகார் அளித்துள்ளேன். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    கவர்னர் சுயவிளம்பரத்துக்கு ஆசைபடுகிறார். சமீபத்தில் தன்னுடைய கையெழுத்துடன் நிலை ஆணை (ஸ்டேன்டிங் ஆர்டர்)ஒன்றை அரசுக்கு அனுப்பி உள்ளார். நிலை ஆணையில் கையெழுத்து போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

    கவர்னர் செல்லும் இடம் எல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் செயல்படுகிறார். சமீபத்தில் கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக அ.தி. மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் போராட்டம் நடத்தி உள்ளார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறி உள்ளார்.

    Next Story
    ×