என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. அணிகள் போட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
    X

    சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க. அணிகள் போட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

    புதுக்கோட்டையில் அ.தி.மு.க. இரு அணிகளும் ஒரே நேரத்தில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதியின் தம்பி கார்த்திகேயனை புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக நியமித்து அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று மாலை அணிவித்து விட்டு கட்சி அலு வலகத்திற்கு செல்வதாக அறிவித்திருந்தார்.

    இது குறித்து போலீசாரிடம் தினகரன் அணியினர் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மாலை அணிவிக்க அனுமதி கேட்டு கார்த்திகேயன் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அனுமதி அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ். பி.க்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கிளையின் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க இருந்தனர்.

    இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடிபழ னிசாமி தரப்பை சேர்ந்த கட்சியின் மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான பி.கே.வைரமுத்து அனுமதி கோரி எஸ்.பி.யிடம் மனு அளித்தார். இருதரப்புக்கும் மாலை அணிவிக்க அனுமதி அளிக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்தார்.

    இதனிடையே ஒரே நாளில் இரு அணிகளும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க இருந்ததால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் கோட்டாட்சியர்கள் தனித்தனியாக பிறப்பித்துள்ள உத்தரவில், புதுக்கோட்டையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். 144 தடை உத்தரவால் அ.தி.மு.க. இரு அணிகளும் இன்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

    Next Story
    ×