search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகேஷ்
    X
    சுகேஷ்

    இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்

    மோசடி வழக்கு விசாரணைக்காக இடைத்தரகர் சுகேஷ் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 16-ந் தேதி மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.
    கோவை:

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற புகாரில் இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

    இடைத்தரகர் சுகேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரை தொடர்பு கொண்ட இடைத்தரகர் சுகேஷ் கர்நாடக முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி டெண்டர் எடுத்து தருவதாக ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்தார்.

    இது குறித்து ராஜகோபால் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இடைத்தரகர் சுகேஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சுகேசின் தந்தை சந்திரசேகர் ராவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சுகேசை கைது செய்தனர்.

    பின்னர் கோவை ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையின் போதே சுகேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் சுகேஷ் ஆஜராகவில்லை. எனவே கோவை கோர்ட் கடந்த ஜனவரி 1-ந் தேதி சுகேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து திகார் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கடந்த ஜூன் 8-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் ரெயில் மூலம் அழைத்து வந்து ஜே.எம். 2-ல் ஆஜர்படுத்தினர்.

    தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக டெல்லி போலீசார் அழைத்து வந்தனர். கடைசியாக கடந்த 17-ந்தேதி சுகேசை ஜே.எம்.2-ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் இன்று சுகேசை ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டனர்.

    இதற்காக டெல்லி போலீசார் இடைத்தரகர் சுகேசை டெல்லியில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் காலை 5.55 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காலை 10.30 மணிக்கு ஜே.எம். 2 கோர்ட் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் வருகிற 16-ந் தேதி மீண்டும் ஆஜர் படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து இடைதரகர் சுகேசை ரெயில் மூலமாக திகார் சிறைக்கு டெல்லி போலீசார் அழைத்துச் சென்றனர்.


    Next Story
    ×