search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகள் அமர்ந்து பேசினால் பிரச்சினை முடிந்துவிடும்: தம்பிதுரை பேச்சு
  X

  ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகள் அமர்ந்து பேசினால் பிரச்சினை முடிந்துவிடும்: தம்பிதுரை பேச்சு

  ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மேஜையில் உட்கார்ந்து பேசினால் பிரச்சினை முடிந்து விடும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கூறினார்.
  கரூர்:

  கரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

  புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். உருவாக்கி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டி காத்த அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. எத்தனை சோதனைகளை தாண்டி இந்த இயக்கம் வெற்றி கண்டுள்ளது. எனவே தற்போதைய பிரச்சினைகளையும் ஒன்றுபட்டு களைவோம். மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலரும்.

  மு.க. ஸ்டாலின் ஏதோதோ பேசுகிறார். முதல்வரை அப்பாய்மெண்ட் இல்லாமல் போய் பார்க்க முடியுமா? முதல்வரிடம் உட்கார்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுமுன் வெளியே வந்து பத்திரிகைகளுக்கு வேறுவிதமாக பேட்டி தருகிறார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்டாலின் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது அவர் நடத்திய நாடகத்தை மக்கள் நம்பவில்லை. நாம் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை கலந்து கொண்டு பேசியதாவது:-

  கலர் கலராக சட்டை அணிந்து கொண்டு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது பேட்டி அளிக்கிறார். இப்போது அவர் அன்புநாதன், சேகர்ரெட்டி, மோகன் ராவ் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனை என்ன ஆனது? இது குறித்து எடுத்த நடவடிக்கை என்ன என்று மத்திய அரசு விளக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தினால், தான் அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை என்று அர்த்தம் என்று சொல்கிறார்.

  அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனையில் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவரே கொடுத்த பேட்டியில் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு சதி செய்கிறது என்று சொன்னார். சேகர் ரெட்டியின் டைரியில் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் பெயர்கள் தான் உள்ளது. சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டால் கம்பி எண்ணப்போவது தி.மு.க.வினர்தான்.

  ஸ்டாலின் ஊழலை பற்றி பேசுகிறார். ஊழலுக்கு வித்திட்டதே தி.மு.க.தான். ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். ராமமோகன்ராவ் வீட்டில் சோதனை நடந்த போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வாய் திறக்கவில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். அ.தி.மு.க.வினர் மீது பொய் புகார் சொல்லிக்கொண்டே இருந்தால் தி.மு.க.வினரின் முகத்திரையை கிழிக்க வேண்டி இருக்கும். அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் மத்திய அரசின் எந்த தலையீடும் இல்லை.

  அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் கலைக்கப்படவில்லை. சிறிது நெருடல் உள்ளது. அதனை போக்குவது நமது கடமை. ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மேஜையில் உட்கார்ந்து பேசினால் பிரச்சினை முடிந்து விடும்.

  கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். இரட்டை இலை சின்னத்தை ஆர்.கே.நகர் தேர்தலில் தள்ளி வைத்தார்கள். ஆனால் முடக்கவில்லை. அதனை ஒன்றுபட்டு மீட்டெடுப்போம். சசிகலா பொது செயலாளர் ஆவதற்கு ஓ. பன்னீர்செல்வமும் காரணம் அல்லவா. 4 மாதம் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சி.பி.ஐ. விசாரணை கேட்காமல் இருந்தது ஏன்? இரண்டு அணியும் ஒன்றுபட வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்க வேண்டாம். இது ஒரு காரணம் அல்ல.

  மனம் திறந்து கேட்கிறேன் இது காரணம் என்று சொல்லாதீர்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்தது தேவையா, தேவை இல்லையா என்பது வேறு பிரச்சினை. சசிகலா படம் வைக்க வேண்டாம் என்று கூறினீர்கள். படத்தை எடுத்து விட்டோம்.

  சசிகலாவை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்க வழி சொல்லுங்கள். தினகரன் ஒதுங்கி விட்டார். இது குறித்து உட்கார்ந்து பேச அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா இருந்தபோதும் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் மாபெரும் தலைவராக இருந்த காரணத்தால் அமைதியாக இருந்தோம். சசிகலா ஒதுங்க தயாராக இருக்கிறார். இதை காரணமாக வைக்க வேண்டாம்.

  தற்போது சசிகலா குடும்பத்தினரிடம் பேசுவதும் இல்லை. அறிவுரை கேட்பதும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதைதான் அமைச்சர்கள் கேட்கிறார்கள். சகோதரர்களே வாருங்கள், பேசுவோம், குறைகளை தீர்ப்போம். மக்கள் எதிர்பார்க்கும் படி இரட்டை இலை சின்னத்தை மீட்டு நல்லாட்சியை தொடருவோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×