search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொத்து தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு- ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்.

    சொத்து தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு- ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார்.
    • திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம்-தென்மலை ரோட்டில் உள்ளது.

    இவர்களுக்கும் காரைக்குடியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி முன்விரோதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்து ராஜாக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார். இதனை தடுக்க வந்த கருப்பையா மீதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் ஒன்றுகூடவே தனபால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமலைக்கு விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜாக்கண்ணு, கருப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு நாட்டுத்துப்பாக்கி பயன்பாட்டில் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு அதனை கைப்பற்றினாலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை பலர் பதுக்கி வைத்துள்ளனர். எனவே இச்சம்பவத்திற்கு பிறகாவது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படவேண்டும். விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×