search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கைத் தமிழா் முகாம்களில் 1,591 புதிய வீடுகள்: முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்
    X

    வேலூர் மேல்மோணவூர் இலங்கைத் தமிழர் முகாமில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகள்.

    இலங்கைத் தமிழா் முகாம்களில் 1,591 புதிய வீடுகள்: முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

    • பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.
    • முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    வேலூர்:

    தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா்.

    இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழா் முகாமில் நாளை காலை நடக்கிறது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 புதிய வீடுகளை திறந்து வைக்கிறார்.

    மேலும், மேல்மொணவூா் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளாா்.

    தொடா்ந்து பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை காலை தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முத்தமிழறிஞா் கலைஞா் அறக்கட்டளை சாா்பில் தமிழகத்தின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா்களில் கட்சி பணியைச் சிறப்பாக செய்த தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பண முடிப்புகளை வழங்குகிறார்.

    மேலும், தி.மு.க. சாா்பில் பெரியாா் விருது கி.சத்தியசீலன், அண்ணா விருது க.சுந்தரம், கலைஞா் கருணாநிதி விருது ஐ.பெரியசாமி, பாவேந்தா் பாரதிதாசன் விருது மல்லிகா கதிரவன், பேராசிரியா் க.அன்பழகன் விருது ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூா் ப.செல்வராஜ், கனிமொழி, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.

    விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் இன்று இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வருகிறார்.

    அங்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடா்ந்து தனியாா் ஓட்டலில் தங்கும் அவா் நாளை நடைபெறும் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மீண்டும் இரவு ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

    முதல்வா் வருகையொட்டி வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பாா்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜி-க்கள், 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

    Next Story
    ×