search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்திய 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்திய 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.
    • கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே 2 கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஆரோன் (வயது 31), பாரதி நகரை சேர்ந்த இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான மூக்காண்டி என்ற ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின்ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதி தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரம் மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூரர் சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி (எ) ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் 13 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய இன்று உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சிவசுப்பு ஆரோனை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.

    இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 137பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×