என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

11 மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
- டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியில் நடந்தது. அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
- பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
திருவள்ளூர்:
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி வாரியாக பூத் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சியும் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள் மண்டல வாரியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றி வருகிறார்.
இதுவரை டெல்டா மாவட்டங்களுக்கான கூட்டம் திருச்சியில் நடந்தது. அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கான கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதைத் தொடர்ந்து மேற்கு மண்டலமான கொங்கு மாவட்டங்களுக்கான கூட்டம் காங்கேயத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு வடக்கு மண்டலத்துக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இப்போது இறுதியாக வருகிற 5-ந் தேதி திருவள்ளூரில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வேடங்கி நல்லூர் ஐ.சி.எம்.ஆர். அருகே நடைபெற உள்ளது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளடங்கிய 11 தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். அதாவது ஒருங்கிணைந்த சென்னையில் 6 மாவட்டங்கள், காஞ்சிபுரம், வடக்கு, தெற்கு மாவட்டங்கள், திருவள்ளூர் மத்திய, மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் 11569 பேர் (பி.எல்.ஏ.-2) கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். திருவள்ளூரில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது.






