search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்- நேரடியாக 2-வது சுற்றில் சிந்து
    X

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்- நேரடியாக 2-வது சுற்றில் சிந்து

    • சிந்து நேரடியாக 2-வது சுற்றில் களம் காணுகிறார்.
    • சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன. சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனாய், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் லக்ஷயா சென், இரட்டையர் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடியினர், பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் உள்ளனர்.

    2019-ம் ஆண்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டு வரலாறு படைத்த பி.வி.சிந்துவின் ஆட்டத்திறனில் சமீபகாலமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக எந்த பட்டத்தையும் வெல்லாத அவர் உலக தரவரிசையில் 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும் அந்த மோசமான நிலைமையை மாற்றுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தன்னை தயார்படுத்தி வருகிறார்.

    நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் சிந்து, அடுத்தடுத்து ரவுண்டுகளில் முன்னாள் சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்), ராட்சனோக் இன்டானோன் (தாய்லாந்து), நம்பர் ஒன் புயல் அன் சே யங் (தென்கொரியா) ஆகிய பலம்வாய்ந்த எதிராளிகளை சந்திக்க வேண்டி வரும்.

    இந்த தடைகளை வெற்றிகரமாக அவர் கடந்தால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகும். நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா) முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள் தாய் ஜூ யிங் (சீனதைபே), கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகிய முன்னணி வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    ஆண்கள் பிரிவில் அண்மை காலமாக சிறப்பாக விளையாடி வரும் 9-ம் நிலை வீரர் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் காலே கோல்ஜோனையும் (பின்லாந்து), லக்ஷயா சென், மொரீசியசின் ஜார்ஜெஸ் ஜூலியன் காலையும், இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவையும் சந்திக்கிறார்கள்.

    சாத்விக்- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகின்றன.

    1977-ம் ஆண்டு முதல் நடக்கும் கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த எண்ணிக்கை மேலும் உயருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×