search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை ஹாட்ரிக் வெற்றி- திலக் வர்மாவுக்கு ரோகித் சர்மா பாராட்டு
    X

    ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை ஹாட்ரிக் வெற்றி- திலக் வர்மாவுக்கு ரோகித் சர்மா பாராட்டு

    • மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது.
    • ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

    ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 193 ரன் இலக்காக இருந்தது.

    கேமரூன் கிரீன் 40 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர், கேப்டன் ரோகித்சர்மா 18 பந்தில் 28 ரன்னும் 16 பவுண்டரி) எடுத்தனர். மார்கோ வின்ஜான் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மயங்க் அகர்வால் 41 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாசன் 16 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் பெஹரன் டார்ப், ரிலே மெர்டிக் பியூஸ் சாவலா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    தெண்டுல்கரின் மகனான அர்ஜூன் தெண்டுல்கர் இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாரை அவுட் செய்தார். அவர் கைப்பற்றிய முதல் ஐ.பி.எல். விக்கெட் ஆகும். தனது 2-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்தார்.

    மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது.

    இந்த வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஐதராபாத் மைதானம் எனக்கு ஏராளமான நினைவை ஏற்படுத்தியது. அந்த அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி ஒரு கோப்பையை வென்றோம். இங்கு மீண்டும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது. ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றியே பெற்று கொடுப்பார்கள்.

    மும்பை அணியின் திலக் வர்மாவை கடந்த சீசனிலேயே அனைவரும் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் அவரது அணுகுமுறை என்னை பிரமிக்க வைக்கிறது.

    "அவர் எந்த பந்து வீச்சாளர்களையும் பார்த்து பயப்படாமல் அவர்கள் வீசும் பந்துகளில் மட்டுமே கவனம் கொடுத்து ஆடுகிறார். எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக திலக் வர்மா நிச்சயமாக விளையாடுவார்.

    அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஆண்டுகள் எங்கள் அணியோடு இருக்கிறார். அவர் திறமை மீதும், பந்து வீச்சு மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணிக்கு ஏற்றவாறு அவர் தன்னை செயல்படுத்துகிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    மும்பை அணி 6-வது போட்டியில் பஞ்சாப்பை 22-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 21-ந் தேதி எதிர்கொள்கிறது.

    Next Story
    ×