என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் முடிக்குமா? பெங்காலுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி 'லீக்' தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் முடிக்குமா? பெங்காலுடன் இன்று மோதல்

    • ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும்.

    புரோ கபடி 'லீக்' போட்டியின் 4-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    12 அணிகள் பங்கேற்று உள்ள இந்த போட்டியில் 'லீக்' முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு நுழையும்.

    புனே, டெல்லி ( தலா 26 புள்ளிகள்) முதல் 2 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. அதை தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ் (20 புள்ளி) , பெங்களூரு, மும்பை (தலா 18 ) பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதுவரை 5 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அரியானா , ஜெய்ப்பூர் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. அந்த அணிகளுக்கு 2 ஆட்டம் எஞ்சி உள்ளன.

    குஜராத், தமிழ் தலைவாஸ், பாட்னா, உ.பி. தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. தமிழ் தலைவாசுக்கும், உ.பி.க்கும் ஒரு போட்டியே உள்ளன. குஜராத், பாட்னாவுக்கு 2 ஆட்டம் இருக்கிறது. பெங்கால் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணிக்கு 2 ஆட்டம் உள்ளது.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடந்த 4 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 46-36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி இருந்தது.

    தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும். குஜராத், உ.பி. அணிகள் விளையாடும் ஆட்டத்தை பொறுத்து பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் (இரவு 8.30 மணி), அரியானா-குஜராத் (இரவு 9.30 மணி) மோதுகின்றன.

    Next Story
    ×