என் மலர்
விளையாட்டு

குகேஷுடன் மோதிய டை பிரேக்கர் பரபரப்பாக இருந்தது- பிரக்ஞானந்தா
- இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- டாடா ஸ்டீல்ஸ் போட்டிக்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா வென்றார். நெதர்லாந்து சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். நெதர்லாந்தில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் அவர் வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சந்தனமாலை, பொன்னாடை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி, பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் பிரக்ஞானந்தாவை வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து நான் சரியாக ஆடவில்லை. இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டாடா ஸ்டீல் போட்டிக்காக நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன்.
இந்த ஆண்டு அதிகமான போட்டிகள் இருக்கிறது. கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகளும் உள்ளன. இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனது ஆட்டத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது மிகவும் திருப்தி அளிக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
கடைசி சுற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே சென்னையை சேர்ந்தவர்களுக்குதான் (பிரக்ஞானந்தா, குகேஷ்) சாம்பியன் பட்டம் என்ற நிலை ஏற்பட்டது. இது மிகவும் பெருமையானது.
கடைசி சுற்று ஆட்டம் இருவருக்கும் சவாலாக இருந்தது. நானும், குகேஷ்-ம் மோதிய டை பிரேக்கர் பரபரப்பாக இருந்தது. எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அதிக வேகமாக காய் நகர்த்துவதற்கான பினிட்ஸ் ரவுண்டில் குகேஷை வீழ்த்தி பட்டம் பெற்றது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.
இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.






