என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்குவாஷ் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    ஸ்குவாஷ் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.
    • இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இந்திய அணி பெற்றது.

    12 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.

    இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையான தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ கா யிக்கு அதிர்ச்சி அளித்தார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் அபய்சிங் 7-1, 7-4, 7-4 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லாவை வீழ்த்தினார். 3-வது ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அனாஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற செட் கணக்கில் ஹோ டோமாட்டோ ஹோவை மடக்கினார். முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் கடைசி ஆட்டத்தில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் களம் இறங்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.

    முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா, இந்த கோப்பையை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையையும் பெற்றது. இந்த வெற்றி, 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் ஸ்குவாஷ் போட்டியில் சாதிப்பதற்கு இந்தியாவுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    அதில், உலக கோப்பை ஸ்குவாஷ் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய வீரர்கள் ஜோஸ்னா சின்னப்பா, அபய்சிங், அனாஹத் சிங், வேலவன் செந்தில்குமார் ஆகியோர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர். அவர்களின் வெற்றி முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய ஸ்குவாஷ் அணியின் வெற்றி நமது நாட்டை பெருமைப்படுத்தி இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

    Next Story
    ×