என் மலர்
விளையாட்டு

IPL 2025: பெங்களூரு அணியின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா ஐதராபாத்? இன்று மோதல்
- இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன.
- 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவுக்கு மாற்றப்பட்டது.
பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்), ஒரு முடிவில்லை என 17 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. அந்த அணியின் கடைசி ஆட்டம் (கொல்கத்தாவுக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதற்கு முந்தைய 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (7 அரைசதத்துடன் 505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார், ஜேக்கப் பெத்தேல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டுவும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர். தோள்பட்டை காயத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (18 விக்கெட்) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.
இதற்கிடையே, லீக் சுற்றுடன் ஜேக்கப் பெத்தேல் (இங்கிலாந்து) தாயகம் திரும்புவதால் அவருக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 9 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் என்று அதிரடி பட்டாளத்துக்கு குறைவில்லை. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், கம்மின்ஸ், இஷான் மலிங்கா நம்பிக்கை அளிக்கின்றனர்.
இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் ஐதராபாத் வீரர்கள் அச்சமின்றி அதிரடி காட்டி பெங்களூரு அணியின் வெற்றிப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட முயற்சிப்பார்கள். அதே சமயம் புள்ளிபட்டியலில் டாப்-2 இடத்தில் நீடிக்க பெங்களூருவுக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். மொத்தத்தில் இரு அணியிலும் 'சரவெடி' பேட்டர்கள் இருப்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
பெங்களூரு: பில் சால்ட் அல்லது ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், இங்கிடி, சுயாஷ் ஷர்மா.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஜேய்தேவ் உனட்கட்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






