என் மலர்
விளையாட்டு

பாத்திரம், கழிவறையை சுத்தம் செய்த பாகிஸ்தான் ஹாக்கி வீரர்- உண்மையை உடைத்த கேப்டன்
- எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை.
- படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை வீரர்களே சுத்தம் செய்தார்கள்.
பாகிஸ்தானின் ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.
உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை.
இதனால் கடுப்பான அவர் லாகூர் விமான நிலையத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே என கூறினார்.






