என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் முதல் உலக கோப்பை கால்பந்து வரை: 2026-ம் ஆண்டின் முக்கிய தொடர்கள்
    X

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் முதல் உலக கோப்பை கால்பந்து வரை: 2026-ம் ஆண்டின் முக்கிய தொடர்கள்

    • மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
    • வரலாற்றிலேயே முதல்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன.

    2026-ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

    2026-ம் ஆண்டு விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு முக்கிய தொடர்கள் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறுகிறது.

    உலக கோப்பை கால்பந்து, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட், உலக கோப்பை ஹாக்கி, காமன் வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டி ஆகியவை இந்த ஆண்டில் நடக்கிறது.

    அதன்படி இந்த ஆண்டின் முதல் தொடராக பெண்கள் பிரீமியர் லீக் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடர் 9-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.

    அடுத்த தொடராக 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை போட்டி வருகிற 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து சர்வதேச போட்டியான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    அதனை தொடர்ந்து 10-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5, வரை நடக்கிறது. முறை முதல்முறையாக 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது.

    உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 23-வது பிஃபா (FIFA) உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 11-ந் தேதி தொடங்கி ஜூலை 19-ந் தேதி வரைகிட்டதட்ட 39 நாட்கள் நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை கால்பந்து தொடரை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    வரலாற்றிலேயே முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64-லிருந்து 104 ஆக அதிகரித்துள்ளது.

    முன்னதாக பிரபலமான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி மே 30-ந் தேதி புடாபெஸ்டில் நடக்கிறது.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவிலும் நடக்கிறது.

    அதற்கு அடுத்தப்படியாக 16-வது ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. வரலாற்றிலேயே முதல்முறையாக ஆடவர் மற்றும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒரே நேரத்தில் இந்த இரண்டு நாடுகளில் நடைபெறவுள்ளன.

    இந்தத் தொடருடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் பாரா ஹாக்கி உலகக் கோப்பையும் (ParaHockey World Cup) நடத்தப்படவுள்ளது.

    அதனை தொடர்ந்து 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, 2026 வரை நடக்கவுள்ளது. ஜப்பானின் ஐச்சி மாகாணம் மற்றும் நகோயா (Nagoya) நகரத்தில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 41 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    Next Story
    ×