என் மலர்
கால்பந்து

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து: 'பெனால்டி ஷூட்'அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்
- 14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது.
- இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.
பாசல்:
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடை பெற்றது. நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் - ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் அடித்தது. மரியோனா கால்டென்டி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. அலெசியா ருஸ்சோ இந்த கோலை பதிவு செய்தார்.
ஆட்டம் முடியும் நேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் கூடுதல் நேரமான 30 நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. இதனால் சாம்பியன் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ஐரோப்பிய கோப்பையை வென்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இங்கிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக ஐரோப்பியன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜெர்மனியை தோற்கடித்து கோப்பையை வென்று இருந்தது.






