என் மலர்
கால்பந்து

கால்பந்தில் புதிய அவதாரம் எடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
- கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், கிளப் நிர்வாகியாகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
- ஸ்பெயினின் இரண்டாம் நிலை லீக் கிளப்பான UD அல்மேரியா அணியின் இணை உரிமையாளராக ரொனால்டோ ஆகியுள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயினின் இரண்டாம் நிலை லீக் கிளப்பான UD அல்மேரியாவின் 25% பங்குகளை வாங்கி, அந்த அணியின் இணை உரிமையாளர் ஆகியுள்ளார். இதன் மூலம் கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், கிளப் நிர்வாகியாகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அல்மேரியா அணி தற்போது ஸ்பானிஷ் செகுண்டா பிரிவில் விளையாடி வருகிறது. ரொனால்டோவின் வருகை அந்த அணியின் வீரர்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அல்மேரியா கிளப்பின் தற்போதைய உரிமையாளரான துர்கி அல்-ஷேக் என்பவருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரொனால்டோ 25% பங்குகளைக் கைப்பற்றியுள்ளார். துர்கி அல்-ஷேக் சவுதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவராவார்.
இந்த முதலீட்டின் மூலம் அல்மேரியா கிளப்பை மீண்டும் ஸ்பெயினின் முதன்மை லீக் ஆன லா லிகா தொடருக்குத் தகுதி பெறச் செய்வதே ரொனால்டோவின் முக்கிய இலக்காகும்.
இதற்கு முன்னதாக, பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ, ஸ்பெயினின் 'ரியல் வல்லடோலிட்' கிளப்பின் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே பாணியில் ரொனால்டோ களம் இறங்கியுள்ளார்.
ரொனால்டோவின் வருகை இந்த சிறிய கிளப்பின் வணிக மதிப்பையும், உலகளாவிய ரசிகர் பட்டாளத்தையும் பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






