என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வே டெஸ்ட்: முதல்நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா
- 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்ஆப்பிரிக்கா.
- லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஸ்ச் சதம் விளாசினர்.
ஜிப்பாப்வே- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் டெவால்ட் பிரேவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கோடி யூசுப் ஆகியோர் அறிமுகம் ஆகினர்.
டோனி டி ஜோர்சி, ப்ரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோர்சி 0 ரன்னிலும், ப்ரீட்ஸ்கே 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முல்டர் 17 ரன்னிலும், பெடிங்காம் 0 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 55 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது தென்ஆப்பிரிக்கா. 5ஆவது விக்கெட்டுக்கு லுவான்- ட்ரே பிரிட்டோரியஸ் உடன் டெவால்டு பிரேவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளயாடியது. பிரேவிஸ் 41 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனார்.
அடுத்து வந்த வெர்ரைன் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடினார். பிரிட்டோரியஸ் அறிமுக போட்டியிலேயே 112 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 157 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 160 பந்தில் 153 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
போஸ்ச் 77 பந்தில் அரைசதமும், 124 பந்தில் சதமும் அடித்தார். தென்ஆப்பிரிக்கா முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்துள்ளது. போஸ்ச் 100 ரன்னுடனும், மபாகா 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.






