என் மலர்
கிரிக்கெட் (Cricket)

13 ஓவரில் 94 ரன்கள்.. அடுத்த 7 ஓவரில் 110 ரன்கள்: நியூசிலாந்திடம் போராடி தோற்ற வெஸ்ட் இண்டீஸ்
- அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
- கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 94 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 7 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தும் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்னும் ரோமாரியோ ஷெஃபெர்ட் 16 பந்துகளில் 34 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர். மேத்யூ போர்டே 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில், சோதி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனாகியது.






