என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: TNPL 2025 சீசனில் 2-வது ஹாட்ரிக்.. சூர்யா ஆனந்த் சாதனை
- முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
- 19-வது ஓவரில் 5 பந்துகளை வீசிய சூர்யா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
சேலம்:
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த நெல்லை அணியின் வெற்றியை ஒரே ஓவரில் மதுரை அணியின் வீரர் சூர்யா ஆனந்த பறித்து விட்டார். 12 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடியது. 19-வது ஓவரை சூர்யா ஆனந்த வீசினார்.
அந்த ஓவரில் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சோனு யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்து ரன் ஏதும் கொடுக்கவில்லை. அடுத்த 3 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை சூர்யா பதிவு செய்தார். இதன்மூலம் நடப்பு சீசனில் 2-வது ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சூர்யா ஆனந்த பதிவு செய்துள்ளார்.
நடப்பு சீசனில் இதற்கு முன்பு நெல்லை அணியை சேர்ந்த சோனு யாதவ், திருச்சி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யா ஆனந்த் கூறும் போது, 'ஹாட்ரிக் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டனும், பயிற்சியாளர்க ளும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தது சந்தோசமாக இருந்தது' என்றார்.






