என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்- கவாஸ்கர் அறிவுரை
    X

    தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்- கவாஸ்கர் அறிவுரை

    • ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    • மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.

    இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.

    இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.

    ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தில் பந்து அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சை பாருங்கள். நிறைய பந்துகள் பிட்ச் ஆனதும் நேராக ஸ்டம்புக்கு சென்றது. திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின. எனவே 124 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருக்க வேண்டும்.

    மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம். நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உள்ளுர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால், இத்தகைய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அனுபவம் சர்வதேச போட்டியில் கைகொடுக்கும்.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது எந்த அணியும் ஆடுகளங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. இதனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் எந்த நெருக்கடியும் இன்றி, தாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள். எத்தகைய ஆடுகளம் சிறந்ததாக இருக்கும் என்பது மற்றவர்களை காட்டிலும் பிட்ச் பராமரிப்பாளர்களுக்கே நன்கு தெரியும். அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. நமக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தை தயார்செய்யும்படி கேட்டால், தோல்விக்கு தான் வித்திடும். அதனால் பிட்ச் பராமரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×