என் மலர்
கிரிக்கெட் (Cricket)

குசால் மெண்டிஸ் அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வென்றது இலங்கை
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 271 ரன்கள் எடுத்தது.
- குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
கொழும்பு:
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்
தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஜனித் லியாங்கே 46 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட்டுடன் ஜோ ரூட் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.
2வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 62 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 61 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜேமி ஓவர்டன் 17 பந்தில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 49.2 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டும், துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.






