என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வங்கதேசத்துக்கு எதிராக சதம் விளாசிய நிசங்கா.. 2-ம் நாள் முடிவில் இலங்கை 290 குவிப்பு
- சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
- நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
கொழும்பு:
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ஷட்மன் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - லஹிரு உதாரா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது.
அதில் லஹிரு உதாரா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நிசங்காவுடன் தினேஷ் சண்டிமால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இதனால் 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 2-வது விக்கெட்டை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.






