என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வங்கதேசம் விலகல்: பாகிஸ்தான் மிரட்டல்- இலங்கை கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?
- வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளது.
- வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான், இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டு நாடுகளும் இணைந்துதான் தொடரை நடத்துகின்றன.
ஆனால், வங்கதேசம் இந்தியாவில் பாதுகாப்பை காரணம் காட்டி விளையாட மறுத்தது. இலங்கையில் குரூப் லீக் போட்டிகளை நடத்த வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஐசிசி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.
வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதா? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை இது தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய கிரிக்கெட் செயலாளர் பண்டுலா திசநாயகே கூறுகையில் "இலங்கை பிராந்திய மோதல்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க விரும்புகிறது. இந்த பிரச்சினை இந்தியா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையிலானது. நாங்கள் தொடர்ந்து நடுநிலை வகிப்பவராக இருந்து கொண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தும் எங்களுடைய நட்பு நாடுகள். எந்தவொரு மற்ற நாடுகளும் இலங்கையில் தொடரை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெற இருக்கிறது.






